வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களிலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் வெற்றி பெறும் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தெலங்கானா, கேரளாவைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, மதுரையில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்ற சௌஹான், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் குடும்பங்களை அழிக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியைப் பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டனர். எனவேதான் தற்போது தமிழக மக்களும் பா.ஜ.க.வுடன் நிற்கிறார்கள்.
ராகுல் காந்தி எங்கு சென்றாலும், பொதுமக்கள் காங்கிரஸை தோற்கடிக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலின்போது ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றார். அவர் சென்ற இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆகவே, காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்றால் ராகுல் காந்தியை அனுப்புங்கள், வேறு யாரும் தேவையில்லை.
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்தது. அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி, ஒன்றாக நிற்கும்போது காங்கிரஸ் மட்டும் புறக்கணிக்கிறது. ஆகவே, காங்கிரஸ் கட்சிக்கு அழிவு ஏற்படுவது உறுதி.
இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த அரசு என்றால் அது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுதான். அக்கட்சியின் அமைச்சர் ஒருவர் சிறையிலும், மற்றொரு அமைச்சர் ஜாமீனிலும் இருக்கிறார்கள். இங்குள்ள அரசே மது விற்கிறது. இந்த அரசு குடும்பங்களை அழிக்கவும், சீரழிக்கவும் வேலை செய்கிறது. அதேசமயம், எங்கள் அரசு மதுக்கடைகளை குறைக்கவும், மூடவும் பாடுபட்டது.
தி.மு.க. ஃபைல்ஸில் அனைத்து மோசடிகளும் அடங்கி இருக்கின்றன. செய்த தவறுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. எனவே, மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக பயனுள்ள மாற்றத்தை தேடினார்கள். ஆகவே, மக்கள் பா.ஜ.க. பக்கம் நிற்கிறார்கள். நாங்கள் வேகமாக வேலை செய்கிறோம். இதன் காரணமாக தெற்கிலும் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு தெலங்கானா சட்டமன்றத் தேர்தலே சாட்சி.
இண்டி கூட்டணி சனாதனத்தை எதிர்க்கிறது. சனாதனம் என்றால் என்ன? வசுதைவ குடும்பகம் நித்தியம். ‘ஆத்மவத் ஸர்வபூதேஷு’. எல்லோரையும் உன்னைப் போல் எண்ணு, இதுவே நித்தியம். உயிர்களுக்குள் நல்லெண்ணம் இருக்க வேண்டும், உலக நலம் இருக்க வேண்டும், இதுவே நிரந்தரம்.
‘சர்வே பவந்து சுகினா ஸர்வே சந்து நிராமய’, எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அனைவருக்கும் செழிப்பும் நலமும் இருக்க வேண்டும், இதுவே சனாதனம். ஆனால், உதயநிதி போன்றவர்கள் சனாதனத்தை அழிப்பதாகப் பேசுகிறார்கள். சனாதனம் டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிடப்படுகிறது.
சனாதனத்தை அவமதிப்பது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். இதற்கு காங்கிரஸும் பதிலளிக்க வேண்டும். உதயநிதியின் கூற்றுடன் அவர்கள் உடன்படுகிறார்கள். சனாதனம் பற்றி இண்டி கூட்டணியின் கருத்து என்ன?
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வலுவாக உள்ளதால் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. மொத்தம் 5,515 ஓட்டுச்சாவடிகள் தேர்தல் பொறுப்பில் உள்ளன. மதுரை மக்களவைத் தொகுதியில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். மதுரை எம்.பி. சுறுசுறுப்பாகவோ, திறம்படவோ இல்லை. அவர் அப்பகுதியில் வளர்ச்சிக்காகவோ, மக்கள் நலனுக்காகவோ பாடுபடவில்லை.
பிரதமர் மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சி நாட்டில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க. மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெறும். நாட்டில் 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவதே எங்கள் இலக்கு. தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றார்.