மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதையொட்டி, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இராம ஜோதி ஏற்றியும், தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தும்படியும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கும், அன்னதானம் உள்ளிட்டவை வழங்குவதற்கும் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கும், கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்ததாகக் கூறப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது தொடர்பாக கடந்த 21-ம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில், தடை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையின் நகல்களும் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தினமலர் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மதுரை மேலமாசி வீதியிலுள்ள மதனகோபால சுவாமி கோவிலின் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அப்புகாரில், “21.1.2024-ம் தேதி வெளியான தினமலர் நாளிதழில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் நிர்வாகத்தின் கீழ்வரும் கோவில்களில், 22.1.2024-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் சமயத்தில், சிறப்பு பூஜைகள் செய்ய தடை உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதோடு, வதந்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகத்தில் மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் பேரில் தினமலர் நாளிதழ் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.