தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டார்.
2023-ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவதில், சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். வாக்காளர்களின் விழிப்புணர்வுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய அரசுத் துறைகள், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி கூறியதாவது, நமது ஜனநாயகத்தின் பரந்த தன்மை, பன்முகத்தன்மை நமக்கு பெருமை அளிக்கிறது. நமது ஜனநாயகத்தின் பெருமைமிகு பயணத்தில் தேர்தல் ஆணையம் முக்கிய பங்காற்றியுள்ளது. இதுவரை 17 நாடாளுமன்றத் தேர்தல்களும், 400-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்ததற்காக தேர்தல் ஆணையத்தின் தற்போதைய மற்றும் முந்தைய குழுவினரை பாராட்டினார்.
நமது நாட்டின் தேர்தல் நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை பெருமளவில் வெற்றிகரமாக பயன்படுத்தியிருப்பது உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாகும். தேர்தல் நடைமுறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் திறம்பட பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்த முடியும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், வசிக்கும் வாக்காளர்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது இலகுவானதல்ல. அனைத்து வகையான சவால்களையும் மீறி, தேர்தல் ஆணைய குழுவினர் இந்த கடினமான பணியை மேற்கொள்வதாகவும், இது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாதனையாகும். வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதியை வழங்கிய தேர்தல் ஆணையத்தை அவர் பாராட்டினார்.
நமது இளைஞர்கள் நமது ஜனநாயகத்தின் எதிர்காலத் தலைவர்கள். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பெற்ற இளம் வாக்காளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த உரிமையைப் பெற்ற பிறகு, அவர்களின் கடமைகளும் அதிகரித்துள்ளன. தற்போது, கூடியுள்ள இளம் வாக்காளர்கள் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதிநிதிகள் என்றும், 2047-ஆம் ஆண்டுக்கான பொன்னான இந்தியாவை உருவாக்குவதில், முக்கிய பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடமிருந்து ‘பொதுத் தேர்தல் 2024-க்கான தேர்தல் ஆணைய முன்முயற்சிகள்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பெற்றுக்கொண்டார்.