75-வது குடியரசு தின அணிவகுப்பைக் காண “சிறப்பு விருந்தினர்களாக” அழைக்கப்பட்டுள்ள, பிரதமரின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கலந்துரையாடினார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டப் பயனாளிகளுடன் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்துறை அமைச்சர் நாராயண் ரானே இன்று கலந்துரையாடினார். இந்த பயனாளிகள் தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு, 2024-ஐ காண பாதுகாப்பு அமைச்சகத்தால் “சிறப்பு விருந்தினர்களாக” அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே, பிரதமரின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் படி, கிராமங்களில் உள்ள பாரம்பரிய கைவினைஞர்களை ஆதரிப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கைவினை திறன்களை மேம்படுத்தவும், ஒரு தொழில்முனைவோராக மாறவும், தங்கள் நிறுவனத்தை நிறுவ இத்திட்டம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 18 தொழிற்பிரிவுகளைச் சார்ந்த கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் ஒரு முழுமையான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் வரும் தொழில்களில் 108 பெண் கைவினைஞர்களும், 148 ஆண் கைவினைஞர்களும் உள்ளனர். இவ்வாறு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் 256 பயனாளிகள், தங்கள் கணவன், மனைவியுடன் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின அணி வகுப்பு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வடகிழக்கு மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் உட்பட 20 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.