தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை இளைஞர்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகின்றன. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான பொதுக்கூட்டத்தில், பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இளம் தலைமுறை வாக்காளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது, இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும். இளைஞர்களுக்கு எதிராக சில கட்சி தலைவர்களின் மனநிலை உள்ளது. உங்கள் வாக்கு பலத்தால் இந்தக் குடும்பக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக காந்தி குடும்பத்தைச் சுற்றியே இயங்குகிறது. நேருவின் மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியை அதிகாரப்பூர்வமாக வழிநடத்தாதபோதும், கட்சியில் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர்.
கடந்த 10-12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய சூழல் இளைஞர்களின் வாழ்க்கையை இருண்டதாக்கி விட்டது. தமது அரசு நாட்டை இருளில் இருந்து மீட்டுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகளை நமோ செயலி மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு எல்லா இடங்களிலும், ஊழல் மற்றும் மோசடிகள் இருந்தன. ஆனால், தற்போது, பல்வேறு துறைகளின் வெற்றிக் கதைகள் குறித்து பேசப்படுகிறது. உங்களின் கனவுகள்தான் எனது தீர்மானம் என்பது மோடியின் உத்தரவாதம் என்று கூறினார்.