பாஜக இருக்கும் வரை திமுகவின் இந்து விரோத எண்ணம் பலிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சிதம்பரம், புவனகிரி விருதாசலம் உள்ளிட்ட பகுதிகளில் என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இன்றைய மாலை என் மண்,என் மக்கள் பயணம், கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி மண்ணில், மிகப்பெரிய தத்துவ ஞானிகளையும், ஆன்மீகப் பெரியோர்களையும் வரலாற்றுத் தடயங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் மாபெரும் புண்ணிய பூமியான புவனகிரி மண்ணில், வெகு சிறப்பாக நடந்தேறியது. சுவாமி ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த மண் புவனகிரி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என ஜீவகாருண்யத்தையும், ஆன்மீகத்தையும் ஊட்டி வளர்த்த சிறந்த முருக பக்தரான வள்ளலார் பெருமான் பிறந்த மருதூரும், புவனகிரி சட்டமன்ற தொகுதியில்தான் உள்ளது.
தைப்பூசத் திருநாளும் வியாழக் கிழமையுமான இன்று, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளும் வள்ளலாரும் பிறந்த மண்ணிற்கு வந்திருப்பதைப் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
வள்ளலார் அன்பையே தெய்வ வடிவாக கண்டார். அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதே அவரது கருத்து. அவரது திருவருட்பா ஒரு ஞான களஞ்சியம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மூன்று மொழி கொள்கைக்கு வள்ளலார் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
அவருடைய பாட சாலையில், மூன்று மொழிகளிலும் பாடங்கள் இருந்தது. ஆனால் வள்ளலார் பிறந்த மண்ணில், அரசுப்பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகள் கற்பதற்கு தமிழக தடை விதித்துள்ளது. பாரதப் பிரதமர் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துவதோடு, ஆங்கிலமும் மற்றுமொரு விருப்ப மொழியும் கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது.
ஆனால், திமுக அரசு, மக்களைப் பயமுறுத்தி, மூன்று மொழிகள் கற்றுக் கொள்வதைத் தடுக்கிறது. மூன்று தலைமுறைகளை பிற மொழிகள் கற்றுக் கொள்ளாமல் தடுத்து விட்டு, நான்காவது தலைமுறையையும் நாசமாக்க முயற்சிக்கிறது திமுக.
சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்று யாராவது ஒரு கூட்டம் போட்டால் அழைப்பு கூட இல்லாமல் அண்ணன் திருமாவளவன் கலந்துகொள்வார். போலி சமூக நீதி பேசிக் கொண்டு, திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
வேங்கைவயல் சம்பவத்திலும், திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவத்திலும், திருமாவளவன் திமுக அரசைக் கண்டிக்கக் கூட முன்வரவில்லை. தன்னை நம்பும் ஒரு பெரும் சமுதாயத்தைத் திமுகவிடம் அடகு வைக்க நினைக்கிறார்.
தமிழகம் ஆன்மீகத்தின் தலைநகரம். தமிழகத்தில் இல்லாத கோவில்களா? சோழப் பேரரசர்களின் குலதெய்வத்திற்கு நிகராக விளங்கும் நடராஜ பெருமான் குடியிருக்கும் ஊர் சிதம்பரம். சோழப் பேரரசர்கள் வழி வழியாக முடிசூடிக் கொண்டது நடராஜப் பெருமானின் திருவடியிலேயே. சைவ சமயத்தின் உயிர்மூச்சாக விளங்கும் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் தில்லை கோவிலின் சிற்றம்பல மேடையில்தான் அரங்கேற்றினார். ராஜராஜசோழன் தேவார திருமுறைகளை இங்கிருந்து எடுத்துதான் உலகிற்கே கொடுத்தார்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களை எல்லாம் இணைத்து, போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், ஒரு ஆண்டிற்கு இரண்டு லட்சம் கோடி வருமானம் தமிழகத்திற்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் சிந்திக்காமல், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், கோவில் உண்டியல் பணத்தைத் திருடுவதையும் மட்டும்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு. பாஜக இருக்கும் வரை திமுகவின் இந்து விரோத எண்ணம் பலிக்காது.
நமது நடைப்பயணத்திற்கு, பொதுமக்கள் ஆதரவைப் பார்த்த அண்ணன் திருமாவளவன் நம் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் பாஜகவினர் இல்லை என்று கூறியிருக்கிறார். உண்மைதான். மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் சாதாரண மக்கள், எந்த அரசியல் கட்சியையும் சாராத மக்கள். போலி சமூகநீதி நாடகத்தால் ஏமார்ந்து இருக்கும் மக்கள்.
வேங்கைவயல் சம்பவத்திலோ, திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் பட்டியல் சமூக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரத்திற்கோ, குரல் கொடுக்காதவர், முன்னாள் அமைச்சர் பொன்முடியை நீதிமன்றம் ஊழல் வழக்கில் குற்றவாளி என தண்டித்ததற்கு மட்டும் நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பிக்க முன்வந்தார்.
தோழமை சுட்டுதல் என்று உங்களை நம்பி ஏமாந்தவர்களும், பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்களும், அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களும் தான் எங்கள் நடைபயணத்தில் பங்கேற்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் ண்களைத் திறந்து பார்த்தால்தான் உண்மை தெரியும்.
வரும் பாராளுமன்றத் தேர்தல், இளைஞர்களுக்கான, மாணவர்களுக்கான, விவசாயிகளுக்கான, பெண்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கும் பாரதப் பிரதமர் நரேத்திர மோடி, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல். நமது பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க இம்முறை தமிழகமும் துணை நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.