இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரிசூல காளிகாம்பாள் மூலவருக்கு தைப்பூசத்தையொட்டி ஊரில் உள்ள பெண்கள் 208 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அவர்களது கைகளால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று தைப்பூசம் திருவிழா முருகபெருமான் கோவில்களில் கோலாகலமாக நடைபெற்றது.
திரிசூலகாளிகாம்பாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் விநாயகர் கோயிலில் காப்பு கட்டி, தைப்பூச திருநாளில் விரதமிருந்து பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கோ பூஜைகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், நவகலசயாக வேள்வி பூஜைகள், ஊஞ்சல் உற்சவம், ஜோதி தரிசனம், உலக நன்மைக்காக வேள்வி பூஜைகள், சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன், ஊர் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிட்டனர்.
பின்பு ஊர் உள்ள பொதுமக்கள் மேள தாளங்களுடன் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அவர்களது கைகளால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை முதல் மாலை வரை பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திரிசூல காளிகாம்பாள் பெண்கள் வார வழிபாட்டு மன்றத்தினர் சிறப்பாக செய்தனர்.