அதிவிரைவு ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்ட, ‘கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறனின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக வடக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது.
இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் தற்போது ஒரு புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சோதனை வெற்றியடைந்துள்ளது.
ரயில்கள் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் போது, ரயில் தடத்தில் ஏதேனும் தடங்கல்கள் இருந்தாலோ, சிவப்பு சிக்னல் விழுந்திருந்தும் இன்ஜின் டிரைவர் விரைந்து ரயிலை நிறுத்த தவறினாலோ, அந்த ரயில் தானாகவே பிரேக் பிடித்து நிற்பதற்கான, ‘கவச்’ எனும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை, ரயில்வே நிர்வாகத்தின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு உருவாக்கி உள்ளது.
இந்த கவச் பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்திறனை, வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகத்தின் ஆக்ரா பிரிவு கடந்த 19ம் தேதி பரிசோதனை செய்தது.
இதற்காக, உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனில் இருந்து ஹரியானாவின் பால்வல் ரயில் நிலையத்தை நோக்கி, அதிவிரைவு ரயில் இன்ஜின், 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது.
வழியில் சிவப்பு சிக்னல் போடப்பட்ட இடத்தில் ரயிலை நிறுத்த வேண்டாம் என, ஓட்டுனருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதே போல அவர், பிரேக் பிடிக்காமல் ரயிலை தொடர்ந்து இயக்கிய போது, சிவப்பு சிக்னல் போடப்பட்ட இடத்தில் இருந்து, 30 மீட்டர் துாரத்திற்கு முன்பாக ரயில் தானாகவே பிரேக் பிடித்து நின்றது.
இரு வழித்தடத்திலும் இந்த சோதனை பல முறை நிகழ்த்தப்பட்டது. இதன் வாயிலாக, கவச் பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்திறன் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.