75-வது குடியரசு தின விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாக விளங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது , “வருங்கால வரலாற்றாசிரியர்கள் இராமர் பிரதிஷ்டை விழாவை, இந்தியா தனது நாகரிக பாரம்பரியத்தை தொடர்ந்து மீட்டெடுப்பதில் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதுவார்கள்.
உலகம் முழுவதும் பல மோதல்கள் தோன்றி இருக்கின்றன. இதற்கான வழியை நியாயத்தின் வெளிச்சத்தில் கண்டுபிடிக்க வேண்டும். பெரிய அளவில் துயரங்கள் தொடர்கின்றன. மனிதர்களின் துன்பம் குறித்து இந்தியர்கள் வேதனைப்படுகின்றனர். இந்தியாவின் பண்டைய ஞானம் உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடியிலிருந்து ஒரு வழியைக் கண்டறிய உலகிற்கு உதவும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதிலும், உலகளாவிய காலநிலை நடவடிக்கையில் தலைமைப் பதவியை எடுப்பதிலும் இந்தியா முன்னணியில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். சுற்றுச்சூழலைப் பற்றிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்காக இந்தியா ‘லைஃப் இயக்கத்தை’ தொடங்கி இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் பிரச்சனைகளைக் கையாள்வதற்காக தனிப்பட்ட நடத்தை மாற்றத்திற்கு இந்தியாவின் முக்கியத்துவத்தை உலகளாவிய சமூகம் பாராட்டி இருக்கிறது.
புதுடெல்லியில் ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த அற்புதமான நிகழ்வு குடிமக்களை மூலோபாய மற்றும் இராஜதந்திர விஷயங்களில் பங்கேற்பதில் அனைவருக்கும் படிப்பினைகளை வழங்கியது. ஜி20 உச்சி மாநாடு, உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா வெளிப்படுவதற்கு ஊக்கமளித்தது. மேலும், சர்வதேச உரையாடலுக்கு தேவையான கூறுகளைச் சேர்த்தது.
நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாக விளங்கும். நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவும். கூட்டு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அதிகமான பெண்கள் ஈடுபடும்போது நாட்டின் நிர்வாக முன்னுரிமைகள் வெகுஜனங்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
சந்திரனின் தென் துருவப் பகுதியில் இந்தியா முதன்முதலில் தரையிறங்கிய ஆண்டு, நிலவுக்குச் சென்ற ஆண்டு. சந்திரயான்-3-க்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சூரிய ஒளிப் பயணத்தையும் மேற்கொண்டது. சமீபத்தில், ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக ஒளிவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய மைல்கற்களை கடக்க உள்ளது.
நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் பணிக்கான ஏற்பாடுகள் சீராக நடந்து வருகிறது. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்பை விட மிக உயர்ந்த இலக்கைக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் விண்வெளித் திட்டம் முழு மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை விரிவுபடுத்துவதையும் ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் முக்கிய பொருளாதாரங்களில் மிக உயர்ந்ததாக உள்ளது. இந்த அசாதாரண செயல்திறன் 2024 மற்றும் அதற்குப் பிறகும் தொடரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு 81 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பாரதத்தை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டும். இது ஒரு சகாப்த மாற்றத்தின் நேரம். நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான பொன்னான வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியதற்காக விளையாட்டு வீரர்களை பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்ததுடன், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
பதக்கப் பட்டியலில் பெண்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி. வரவிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஆயுதப் படைகள், காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளின் உறுப்பினர்களின் வீரம் மற்றும் விழிப்புணர்ச்சி இல்லாமல், இந்தியா இவ்வளவு பெரிய உயரங்களை எட்டியிருக்காது” என்றார்.