75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி மலர்களை தூவின.
75-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, டெல்லி கடமைப்பாதை மேல் பறந்த விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி அணிவகுத்து மலர்களைத் தூவின. நான்கு Mi-17 IV ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படை வீரர்கள் வானத்திலிருந்து பூக்களை தூவினர்.
தொடர்ந்து, டெல்லி கடமைப்பாதையில் இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை, துணை இராணுவப்படை உள்ளிட்ட பல்வேறு படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. மேலும், பிரான்ஸ் ஆயுத படைகள் அணிவகுப்பும் நடந்தது. இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின.