தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் விழிப்புணர்வுக்கு புது முயற்சிகள் வேண்டும் எனக் கூறினார்.
தேசிய வாக்காளர் தினம் நேற்று முடிவடைந்தது. இதனை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில், தேர்தல் கமிஷன் சார்பில், தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. இதில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமை வகித்தார்.
அதில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, முதல்முறை வாக்காளர்களை அதிகம் சேர்த்த, துாத்துக்குடி, ஈரோடு, பெரம்பலுார் கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்கள், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ – மாணவியருக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், தேர்தல் விழிப்புணர்வுக்கு புது முயற்சிகள் வேண்டும் என கூறினார். இதுகுறித்து அவர், ” நம் ஜனநாயகத்தின் அடித்தளமாக, வாக்காளர்கள் உள்ளனர். நம் நாடு மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடு. உலக நாடுகளின் பிரச்னைக்கு தீர்வு காண, மற்ற நாடுகள் இந்தியாவை எதிர்பார்க்கின்றன.
நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதில், தேர்தல் கமிஷன் உலகில் நற்பெயரை பெற்றுள்ளது. குற்றங்கள் நடக்காமல் இருக்க, தேர்தல் கமிஷன் பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அது முடியாது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும் ” என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அலுவலர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.