இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை நாட்டின் தலைநகரான ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது.
இஸ்லாம் மதத்தின் படி மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சவூதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.
நூற்றுக்கணக்கான கசையடி தருவது, மது அருந்துவோரை நாடு கடத்துவது. அபராதம் அல்லது சிறைத்தண்டனை போன்றவற்றை அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்கின்றனர்.
அதேநேரம் அண்மைக்காலங்களில் நடந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சவுதியில் மது அருந்தினால் சவுக்கடி என்பது பெரும்பாலும் சிறை தண்டனைகளால் மாற்றப்பட்டிக்கிறது.
இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. அந்நாட்டைச் சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கில், சவுதி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு துாதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மது வாங்க விரும்புவோர், ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘கியூ ஆர் கோடு’ ஒன்றை வழங்கும். அதன்படி ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவு மதுவை மட்டுமே அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆசியா மற்றும் எகிப்தை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இங்கு பணியாற்றும் சூழலில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர் இங்கு மது வாங்க முடியுமா என்ற விவரம் தெரியவில்லை.