இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதன் முதல் போட்டி நேற்று தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஸ்ட்ரைக்கில் இருந்தனர்.
இதில் ஜெய்ஸ்வால் 76 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று போட்டி தொடங்கிய உடனே ஜெய்ஸ்வால் ஒரு பௌண்டரி அடித்து 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி 8 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 123 பந்துகளில் 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் என 63 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 81 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 7 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட 155 பந்துகளில் 81 பந்துகள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அதேபோல் அக்சார் பட்டேல் 5 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட 62 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் ஸ்ட்ரைக்கில் உள்ளார்.
இதனால் இந்தியா இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.