மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரம் அருகே லோயர் கேம்ப் பகுதியில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல்நலக் குறைவால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து கொழும்பில் இருந்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பவதாரிணியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், ஏராளமான பொதுமக்கள் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பவதாரிணியின் உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின், லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே மகள் பவதாரணியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.