மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மராத்தா சமூகத்தினரின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
கல்வி, அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மராத்தா சமூகத்தினர் நீண்ட நாட்களாக மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, அனைத்து மராத்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த விவகாரத்தில் அவசர சட்டம் நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தன்று காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவின் தலைவர் மனோஜ் ஜரங்கே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் மனோஜ் ஜரங்கே ஆர்பாட்டத்தில் குதித்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவில் குவிந்தனர். பல அடுக்குமாடி கட்டிடங்களின் மீது ஏறி அவர்கள் தங்கள் கோரிகைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், மராத்தா சமூகத்தினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.இதனையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக மனோஜ் ஜரங்கே அறிவித்துள்ளார்.