வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன.
தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முக்கியமாக, மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் 47 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 96 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில், 1 கோடியே 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 18,19 வயதைச் சேர்ந்தவர்கள். மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 18 லட்சம் பேர் உள்ளனர்.
வருகிற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுமார் 1 கோடியே 50 லட்சம் பணியாளர்கள் வாக்குப்பதிவுக்காக பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 91 கோடியே 20 லட்சமாக இருந்தது. இந்தியாவில் கடந்த 1951-ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில், சுமார் 17 கோடியே 32 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இது 1957-ல் 19.37 ஆக அதிகரித்தது.