தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது.
பனிமூட்டம் மற்றும் குளிர் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், மூடுபனி நிலவும் என்றும் கூறியுள்ளது.
வட மாநிலங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடலை வாட்டி வதைக்கும் கடும் குளிரில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்கின்றனர். மேலும், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு, ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.
மோசமான வானிலை காரணமாக, டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக இயக்கப்பட்டன. ரயில்கள் 4 முதல் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் காற்றின் தரம் 450 ஆக பதிவாகி உள்ளது.