2023-24 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு தெற்கு இரயில்வே வருவாய் ஈட்டியுள்ளதாக, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று 75-வது குடியரசு தின விழா கோலாகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, இரயில்வே காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
பின்னர், பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது, ” ரயில்களை சரியான நேரத்தில் இயக்குதல், பயணிகளின் வசதிகள் என தொடர்ந்து, தெற்கு இரயில்வே சிறப்பான சேவையை செய்து வருகிறது. தெற்கு இரயில்வே பல துறைகளில் சாதித்து வருகிறது.
2023 – 2024 ஆம் ஆண்டில், தெற்கு இரயில்வே, 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 5 சதவீதம் அதிகமாகும்.
2023 – 2024 ஆம் ஆண்டில், தற்போது வரை, 32.24 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இருக்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று கூறினார்.
சென்னை எழும்பூர், காட்பாடி, இராமேஸ்வரம் உட்பட 13 இரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 93 இரயில் நிலையங்களில் முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி – நாகர்கோவில், திருநெல்வேலி – மேலப்பாளையம் ஆகிய வழித்தடங்களில், நடந்து வரும் இரயில் பாதை பணிகள், அடுத்த மாதத்திற்குள் முடிவடையும்.
அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இரயில்கள் இயக்கப்படுகின்றன என்று கூறினார்.