உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் பிராண பிரதிஷ்டை விழா முடிந்து ஐந்தாவது நாளான இன்று அதிகாலை முதலே கடும் குளிர், மூடு பனி ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
குளிரையும் பொருட்படுத்தாமல் வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து வைத்துள்ளதாக அயோத்தியில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரவீன் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” ராமர் கோவிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருக்கின்றனர்.நேற்று சுமார் 3.15 பேர் தரிசனத்திற்கு வந்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் இருப்பதாய் உறுதி செய்து வருகிறோம்.
இன்றும் நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் இருந்து நிறைய பக்தர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது” என கூறினார்.
மேலும் அவர், ” குளிர்காலம் மற்றும் குளிரை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தாலும், வயதானவர்கள் குளிர்காலத்திற்கு பிறகு கோவிலுக்கு வருகை தருமாறு நாங்கள் முன்பே வலியுறுத்தியிருந்தோம். மக்கள் குளிர்காலம் முடிந்த பின்னர் வருகை தருமாறு தற்போது கேட்டுக்கொள்கிறோம். இருப்பினும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நாங்கள் செய்து வைத்துள்ளோம்” என கூறினார்.