முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்து தான் பேசுகிறீர்களா? என தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி காப்பதற்கே நான் இருக்கிறேன் என கனவில் வாழும் முதல்வருக்கு எனது முதற்கண் வணக்கம்.
நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு செவியில் கேட்காது. எனக்கு எனது படப்பிடிப்பே முக்கியம் என இருக்கும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், எழுதியதை பார்த்து படித்தபோது ‘இன்றைய புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுகின்ற பட்டியலின மக்களின் நலனைப் பாதுகாக்கிற அரசுதான், நமது திராவிட மாடல் அரசு!’என வழக்கம் போல் அதன் அர்த்தம் தெரியாமல் படித்துவிட்டார்…!
முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்துதான் பேசுகிறீர்களா?வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து பட்டியலின மக்களை உங்கள் கட்சிக்காரர்களின் வசவுகளில் இருந்தும், அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றவே உங்களால் முடியவில்லை.
உங்கள் மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்த அலங்காரம் செய்துகொண்டு சமூகநீதி வார்த்தை ஜாலங்கள் வேறு! கிட்டத்தட்ட மூழ்கி விட்ட கப்பலில் இருந்து தப்பிக்கும் எலிகள் போல ஏற்கனவே மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜிரிவால் தப்பித்துவிட்ட நிலையில் ‘எப்போ கிளம்புவோம் என நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்த அலங்கார பேச்சுக்கள்?முத்தமிழ் வாய் வித்தகர் உங்கள் தந்தை பார்த்த வியாபாரத்தை தற்போது நீங்களும் பார்க்க நினைக்காதீர்கள்.
நமத்துப்போன பொறி விற்காது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் அய்யா..?தயவுசெய்து மீதமிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். நான் சொன்னது தமிழக மக்களுக்கு. உங்கள் வீட்டு மக்களுக்கல்ல என எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.