தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.
தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதனால், ஒரு கட்டத்தில் ஆளுநர் உரை இல்லாமலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினார். மேலும், ஆளுநர் தேநீர் விருந்து உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில், நாட்டின் 75-வது குடியரசு தின விழா ஐதராபாத்தில் நடந்தது. இவ்விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசன முறைக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பாகட்டும், மக்களின் வாழ்வாதாரமாகட்டும் முந்தைய அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடித்து வந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் பிரிவதற்கு முக்கியப் பங்கு வகித்த இளைஞர்களின் நலன் குறித்து மாநில அரசு சிந்திக்கவில்லை.
ஆகவேதான், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், சர்வாதிகார அரசுக்கு தெலங்கானா மக்கள் முடிவுரை எழுதி விட்டனர். இதன் மூலம், மக்களின் வாக்குகள் எதேச்சதிகாரத்துக்கும் ஆணவத்துக்கும் இடமில்லை என்பதை அறிவித்திருக்கிறது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான புதிய அரசு மக்களுக்கு சம வாய்ப்புகளையும், சமூக நீதியையும் வழங்குவதோடு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் வழங்கும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இதன் மூலம் அரசியல் சாசன நடைமுறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியிருக்கிறார்.