பிரதமர் நரேந்திர மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா பதிவுகள் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சாவில் 2.26 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
பரீக்ஷா பே சர்ச்சா என்பது மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த சூழலில், பரீக்ஷா பே சர்ச்சாவின் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் பிரதமர் மோடியுடன் உரையாடுவார்கள்.
ஆகவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிக்ஷா பே சர்ச்சாவுக்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, பரிக்ஷா பே சர்ச்சா என்பது ஒரு வருடாந்திர பாரம்பரியமாக மாறிவிட்டது என்றும், தேர்வெழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதட்டத்தை சமாளித்து, தங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, இந்நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் மற்றும் கலா உத்சவ் வெற்றியாளர்கள் முக்கிய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.
அதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2.26 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 22,000 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்கவும், பிரதமருடன் உரையாடவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே உள்ள பரவலான உற்சாகத்தை இது காட்டுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.