பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
நமது விண்மீன் மண்டலத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை வலுப்படுத்துகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வளிமண்டலத்தில் நீராவி உள்ளது. ஆனால் கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பாறைகள் நிறைந்த கிரகத்தின் வளிமண்டலங்களில் நீர் மூலக்கூறுகள் நிறைந்து இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுக்கு முக்கிய சான்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு, நீராவியும் கலந்து இருப்பதால், உறைந்த பனி கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், இது பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.