உச்ச நீதிமன்ற கட்டிடத்தை விரிவுபடுத்த ரூ.800 கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளம் மற்றும் பல புதிய முயற்சிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போதைய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு அறிந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தை விரிவுபடுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும் 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை வசதி, தகவல் தொடர்பு வசதி, பயணத்தின் எளிமை ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும் அதே வேளையில், உச்ச நீதிமன்றமும், அரசும் இணைந்து நீதியை எளிதாக்குவதில் கவனம் செலுத்துகின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.
மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி உள்ளது. நமது மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. நம்பகமான நீதித்துறையை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு பல முடிவுகளை எடுத்து வருகிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவியுடன் எனது பேச்சு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். நீதிமன்றங்களில் தொழில்நுட்பம் இருந்தால், சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்க முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.