கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் வட இந்தியா நடுங்கும் நிலையில், தமிழகத்தின் உதகையும் காஷ்மீராக மாறி உள்ளது. உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனியால், மக்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். டிசம்பர் மாதத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், காலநிலை மாறுபாடு காரணமாக, இந்த ஆண்டு பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து நீலகிரியில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனிக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.
பசுமையாக இருக்கும் புல் மைதானங்களின் மேல் படர்ந்த உறைபனியால் வெண்ணிற ஆடை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளித்தது. மேலும், சாலையோரம் நிறுத்திவைக்கப்படிருந்த வாகனங்கள் மீதும் உறைபனி கொட்டி இருந்தது. இரவில் தொடங்கும் கடும் பனிப்பொழிவு, காலை வரை நீடிக்கிறது. இதனால், காலையில் பள்ளிகள் மற்றும் பணிக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டனர்.
தலை குந்தா, சோலூர், அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி வரை பதிவானது. பகல் நேரத்தில் வறண்ட வானிலை நிலவும் நிலையில், மாலை முதல் அதிகாலை 8 மணி வரை கடும் குளிர் வாட்டி வருகிறது. நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.