அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், சீக்கியர்களுக்கான நீதி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பினரால், காலிஸ்தான் தனி மாநிலம் கோரி வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தபோதிலும் இந்த வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தவில்லை.
சீக்கியர்களுக்கான நீதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனியாகப் பிரித்து காலிஸ்தான் தனி நாடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த அமைப்பினரின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை.
அதேசமயம், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள். ஆகவே, அந்நாடுகளில் இருந்தபடியே காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை தீவைத்து எரித்ததோடு, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். சீக்கியர்களுக்கான நீதி என்கிற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினரால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த வாக்கெடுப்புக்காக சிவிக் சென்டர் பிளாசாவில் ஒரு பெரிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பு இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார்கள், பேருந்துகள் மற்றும் இரயில்களில் வந்து ஏராளமானோர் வாக்களித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மேலும், வாக்களித்தவர்கள் காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ராவாலேயின் படம் பொறித்த ‘காலிஸ்தான் வாக்கெடுப்பில் நான் வாக்களித்தேன்’ என்று அச்சிடப்பட்ட நீல நிற ஸ்டிக்கர்களையும் அணிந்திருந்தனர். இதில் வேதனை என்னவென்றால், அமெரிக்கா தன்னை இந்தியவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த வாக்கெடுப்பை தடுக்க அமெரிக்க அரசாங்கம் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். இதன் மூலம், ஏற்கெனவே கனடா நாடு காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆகவே, தற்போது அமெரிக்காவும் காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.