காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. பந்திபோராவில் திரும்பும் திசையெங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
காஷ்மீரின் மலை பகுதிகளில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், அதிகளவில் பனி பொழிவு இருக்கும். ஆனால், இம்முறை புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பந்திபோரா மாவட்டத்தில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
சுற்றுலா நகரங்களான பகல்காம், குல்மார்க் மற்றும் அனந்த்நாக், சோபியான், பட்காம், குப்வாரா, ஸ்ரீநகர் என காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருவதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு சிலர் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.