இண்டி கூட்டணி உருவாக காரணமான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரே அந்த கூட்டணியில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,சங்கராபுரம் சட்டமன்றத்தொகுதியில், நேற்று பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது :
கஷ்டங்களை எல்லாம் போக்கும் கங்கை முத்து மாரியம்மன் அருள்புரியும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத்தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்துடன் என் மண் என் மக்கள் பயணம் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு தொடர்ச்சி மலையின் பழமையான பகுதிகளில் ஒன்றான கல்வராயன் மலை அமைந்துள்ள தொகுதி.
பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 50,030 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,51,824 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,74,938 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 66,512 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,97,714 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,81,648 விவசாயிகளுக்கு, PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், முத்ரா கடன் உதவி 512 கோடி ரூபாய் என, மத்திய அரசின் நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளன.
பத்து ஆண்டுகளாக, மத்தியில் ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த சந்தர்ப்பவாத இண்டி கூட்டணியில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தான் இண்டி கூட்டணியைத் தொடங்கியவர். தற்போது அவரே அந்த கூட்டணியில் இல்லை. இவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணி, தேர்தல் வரும் வரை கூட தாங்கவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தல், நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பத்து ஆண்டுகளாக நேர்மையான நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் மோடியை ஆதரிப்போம். ஊழல், குடும்ப கட்சிகளை தமிழகம் முழுவதும் புறக்கணிப்போம் என அவர் கூறியுள்ளார்.