சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவியதன் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமான நிறுவனங்கள் பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்தன.
பெருந்தொற்று குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு, சென்னையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஒரு சில இடங்களுக்கு படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டன.
அந்த வகையில், ஹாங்காங் – சென்னை இடையே இயக்கப்பட்டு, வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவையை வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும். மேலும், சென்னை – மொரீஷியஸ் இடையே ஏர் மொரீஷியஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.