27,000 அடி உயரத்தில் இருந்து பக்தர்கள் கைலாஷ் மானசரோவரை தரிசனம் செய்ய நேபாளம் புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.
கயிலை மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் என்று இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலைச் சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இம்மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகள் சிந்து ஆறு, சட்லெச்சு ஆறு, பிரம்மபுத்திரா ஆறு ஆகியவையாகும். இதனருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும்.
இந்த இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆண்டுதோறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில் நேபாளத்தில் உள்ள நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புதிய விமானம் சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானத்தில் இருந்து பக்தர்கள் 27,000 அடி உயரத்தில் கைலாஷ் மானசரோவர் சன்னதியை தரிசனம் செய்யலாம்.
இந்தியாவில் இருந்து ‘டூர் தி டெம்பிள்’ டிராவல் ஏஜென்சிக்கும் நேபாளத்தின் ‘பாத் ஹில் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
38 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்த விமானம் இமயமலையில் உள்ள தனியார் விமான நிறுவனமான ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பெரும்பாலும் டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்.
நேபாளம், நேபால்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் நேபாளத்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இருந்தனர்.
கொரோனா தோற்று நோய்க்கு முன்பு சுமார் 12,000 இந்தியர்கள் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவருக்கு பயணம் செய்தனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்திய சுற்றுலாப் பயணிகள் கைலாஷ் மானசரோவருக்கு வருவதற்கு சீனா தடை விதித்திருந்தது.
இதற்கிடையில் தற்போது நேபாளம் இந்த விமான சேவையை தொடங்கியது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.