தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவில் பழநி முருகன் கோவில் ஆகும்.இங்குள்ள முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது. சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது.
நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான மூலிகை பொருட்களின் கலவையாகும். இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
இப்படி சிறப்பு வாய்ந்த பழநி மலை முருகன் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், பழநி மலைக் கோவிலுக்கு ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி இருந்தது.
இந்த வழியில் எடப்பாடி பக்தர்களும் முந்தியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனை கோவில் பாதுகாவலர்கள் தடுத்தனர். அப்போது, எடப்பாடியைச் சேர்ந்த சந்திரன் என்பவரைத் தடுத்துள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு உருவானது. கடைசியில் பக்தர் சந்திரனின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சந்திரன் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி சேர்ந்த பக்தர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், பக்தர்களைத் தாக்கிய பாதுகாவலர்களை இடைநீக்கம் செய்வதாகக் கோவில் உதவி ஆணையர் லட்சுமி உறுதியளித்தார். அதன்பேரில், ஒரு பிரிவினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.