மணிப்பூரில் மர்ம நபர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 4-ம் தேதி கூகி மற்றும் மெயிட்டி ஆகிய இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநிலத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
இதன் பிறகு, மாநிலத்தில் படிப்படியாக அமைதி நிலவத் தொடங்கியது. இதனிடையே, திடீரென மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்புப் படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையை நடந்த இத்தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆகவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.