பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாகப் பெற்று வந்த சரண் விடுப்பையும் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும், இது திமுக தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அரசு ஊழியர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குகிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் போராட்டம் அறிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மேலும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, பிப்ரவரி 26 -ம் தேதி முதல் ஜாக்டோ – ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். அவ்வாறு நடைபெற்றால், தமிழக அரசு செயல்படாமல் முடங்கும் நிலை ஏற்படும். இதனால், பொது மக்கள் பெரிதும் அவதிப்பட நேரிடும்.