சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோரது ஜாமீன் மனு 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ, மருமகள் மெர்லின் ஆகியோர், உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரேகா என்பவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கடந்த 8 மாத காலமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், காவல்துறையினர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை பிணை கொடுக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி செலவினை ஏற்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த மதுரை எவிடென்ஸ் கதிர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, தங்களுக்கு ஜாமீன் கோரி, சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கும்படி காவல்துறைக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 2-ம் தேதிக்கு தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.