ஞானவாபி மசூதி தெற்கு பகுதி அருகே இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வந்தது. இந்திய தொல்லியல் துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில், மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்னர் இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஞானவாபி மசூதி தெற்கு பகுதி அருகே இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்,ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 7 நாட்களுக்குள் பூஜைக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதியை சுற்றிலும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.