வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளதாகவும், அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு என்ற இலக்கை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது, இந்திய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றனர். மக்களின் ஆசியுடன், 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அரசு பதவியேற்றபோது, சப்கா சாத், சப்கா விகாஸை மந்திரமாகக் கொண்டு நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது. அரசாங்கம் அந்தச் சவால்களை சரியான ஆர்வத்துடன் சமாளித்தது என தெரிவித்தார்.
80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழஙகப்பட்டுள்ளன. வளர்ச்சி திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களை அடைய தொடங்கியுள்ளது. அனைவருக்கும் எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு என்ற இலக்கை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக நிதியை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தேசியக் கல்விக்கொள்கை இந்திய கல்வி துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஸ்கில் இந்தியா மிஷன் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளோம். 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் என ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.