மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர்,ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றி வருவதாகவும், நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்கள் அரசு அனைவரையும் அரவணைக்கும் அரசாக உள்ளதாகவும், விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாகவும், பிரதமர் காப்பீடு திட்டம் மூலம் 4 கோடி விவசாயிகள் பலன் பெற்றதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
11.8 கோடி விவசாயிகள் அரசின் திட்டங்களினால் பலன் பெற்றுள்ளதாகவும், ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் உயர்கல்வி படிப்பது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழைகளின் ஜன்தன் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டத்தினால் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
பெண்கள் தொழில்துவங்க முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது.சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதே அரசின் தாரக மந்திரம் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.