ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தல் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், 2047ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ திட்டத்தை அடைவதற்காக சுற்றுலா மையங்களின் விரிவான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
சிறிய சுற்றுலா மையங்களில் விரிவான வளர்ச்சி மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றார். அதற்காக மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் சுற்றுலா செல்ல விரும்புவதாகவும், இதனால் சுற்றுலா துறையில் உள்ள உள்ளூர் தொழில் முனைவோர் மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு திட்டங்கள், சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இது வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என்றும், நாட்டின் பன்முகத்தன்மை உலகளாவிய பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார வலிமை, நாட்டை வணிக மற்றும் சுற்றுலாவுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது என்றும் கூறினார். லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்களை வாங்க உள்ளதாகவும், உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கை விரிவிபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.