சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 2023 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனாவிடம் அடுத்த ஐபிஎல் தொடரில் உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை எனக் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த சில சீசன்களாக சென்னை அணியில் இணைந்து விளையாடி வரும் இலங்கை அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு இறுதியில் தோனி தன்னிடம் கூறிய சில விடயங்களை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு புறப்படலாம் என்று கிளம்புவதற்கு முன்னதாக தோனியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என அவரிடம் சென்றிருந்தேன். அப்போது தோனி என்னிடம் அடுத்த சீசனில் உனக்கு பயிற்சியில் பந்துவீச வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
மேலும் சில நொடிகள் கழித்து பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வது மட்டும்தான் அடுத்த சீசனில் உனக்கு முக்கிய வேலை என்று என்னிடம் கூறினார் ” என தீக்ஷனா கூறினார்.
மஹீஷ் தீக்ஷனா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 4, 5 முறை முக்கிய சமயத்தில் கேட்சை தவறவிட்டிருக்கிறார்.
அதேபோன்று அவருக்கு பேட்டிங்கில் பெரிய அளவு முன்னேற்றம் தேவை என்றும் அப்படி பேட்டிங் பயிற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புகளில் கொஞ்சமாவது ரன்களை சேர்க்க முடியும் என்பதாலேயே அவருக்கு பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளுமாறு தோனி அறிவுரை வழங்கி உள்ளார்.
தீக்ஷனா தற்போது இலங்கை அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். விரைவில் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாட இருக்கிறார்.