இந்தியாவில் உள்ள பெண்கள் பணியிடங்களில் அதிகமாக இருக்கிறார்களா என்பதை அறிய மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் பெண் தொழிலாளர்களை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து பணியிடங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளன.
உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), இந்தியாவில் மொபைல் சாதனங்களில் ஒரு கணக்கெடுப்பை அனுப்பத் தொடங்கியுள்ளது.
குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக இந்த கணக்கெடுப்பு அனுப்பப்படுகிறது. அதில் பெண் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பணியிடம் மற்றும் முதலாளிகள் வழங்கும் ஆதரவு பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது.
மேலும், கணக்கெடுப்பு பெறுபவர்களிடம் அவர்களின் பணியிடங்களை மதிப்பிடவும், இரவு நேர போக்குவரத்து, பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள்வதற்கான உள் குழு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் பலவற்றைப் பற்றியும் கேட்கிறது.
இந்த கணக்கெடுப்பு முதலாளிகளின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகளை அளவிடுவதற்கும் உதவுகிறது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த முயற்சியை மேற்கொள்வதற்காக அவர்கள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், ” புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2022-23-ன் படி, நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 சதவீதம் அதிகரித்து 37.0 சதவீதமாக அதிகரித்திருந்தது.
நீண்டகால சமூக-பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கொள்கை முன்முயற்சிகள் மூலம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்காக அரசு நிர்ணயித்த தீர்க்கமான செயல்பாடுகளின் விளைவாக, பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதத்தில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
பெண் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான வசதி, பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கைச் சுழற்சியில் அரசின் முன்முயற்சிகள் விரிவடைந்துள்ளன ” எனக் தெரிவித்திருந்தது.
தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-23 ஆம் ஆண்டில் 2.8 மில்லியன் பெண்கள் EPFO இல் பதிவுசெய்துள்ளனர். இது இதுவரை இல்லாத அளவு அதிகரித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
கடந்து ஜனவரி 30 ஆம் தேதி அன்று பணியிடத்தில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண் ஊழியர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், தொழிலாளர் அமைச்சகம், முதலாளிகளுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டது.
மேலும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு பெண்களுக்கான சில வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.
மேலும் அவர், ” எங்கள் மாண்புமிகு பிரதமரின் தலைமையில் டிஜிட்டல் ஜனநாயகத்தை நினைத்து நாங்கள் பெருமையுடன் இருக்கிறோம், இன்று நாடு முழுவதும் 24 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன” என்று அவர் கூறினார்.