கேரளாவில் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் குற்ற வாளிகள் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு கொலை மிரட்டல் விடுக்ககப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பா.ஜ.க. மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இரு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், அதில் தொடர்புடைய 15 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜி ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய ஆலப்புழா தெற்கு போலீசார் ,6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்லம் வளவுபாச்சா, நசீர்மோன் கலீல், ஆசாத் அமீர், ரஃபி ஷபீக் ஆகியோர் மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.