இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியுள்ளது. தொடக்கத்திலேயே இந்திய அணியில் தொடக்க வீரர்க களமிறங்கிய ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.
நேற்றையப் போட்டி முடிவில் 179 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் இன்று இரட்டை சதம் எடுத்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது சோயப் பஷீருக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு அடுத்த பந்திலேயே பண்டரியையும் விளாசி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடித்தார்.
குறிப்பாக முதல் நாளிலேயே 94 ரன்களில் இருந்த போது டாம் ஹார்ட்லிக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு சதமடித்த அவர் தற்போது 191 ரன்களில் இருந்த போது பவுண்டரியை விளாசி இரட்டை சதமடித்துள்ளார்.
ஜாம்பவான் வீரேந்திர சேவாக் போல கொஞ்சமும் தயக்கமும் பயமும் இல்லாமல் சதத்தையும் இரட்டை சதத்தையும் ஒரே போட்டியில் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இப்போட்டியில் இதுவரை 19 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரு இன்னிங்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்சர்கள் கூட அடித்ததில்லை.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு சவால் விடும் வகையில் ஜெயிஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் கேட்ச் பிடிக்க ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.