டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் சுற்றில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இந்த தொடரின் போட்டி இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதல் போட்டி நடைபெறுகிறது.
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாட உள்ளதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் இந்திய டென்னிஸ் அணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. கடைசியாக 1964 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இந்திய டென்னிஸ் அணி, 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் ஒற்றையர் போட்டியில் ராம்குமார் (இந்தியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) ஆகியோர் மோதுகிறார்கள். இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஒற்றையர் போட்டியில் அகீல் கான் (பாகிஸ்தான்) – ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா) மோதுகின்றனர்.
2-வது நாளான நாளை நடைபெறும் இரட்டையர் போட்டியில் பர்கத்துல்லா-முஜாமில் முர்தசா (பாகிஸ்தான்) – யுகி பாம்ப்ரி-சகெத் மைனெனி (இந்தியா) இணை மோதுகின்றனர். அதேபோல் ஒற்றையர் போட்டியில் ராம்குமார் – அகீல் கான், அய்சம் உல்-ஹக் குரேஷி – ஸ்ரீராம் பாலாஜி ஆகியோரும் மோதுகிறார்கள்.
டேவிஸ் கோப்பைப் போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 7 முறை மோதியுள்ள இந்திய அணி எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.