சாத்தான்குளம் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தவர் திடீரென மயக்கம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது பன்னம்பாறை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சந்தனம். இவரது மகன் சண்முகம் (37). கூலித் தொழிலாளி. இவர் குடும்ப நிகழ்வுக்காக முதலூர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது நண்பர்களுடன் சேர்ந்து முதலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 2 பீர் வாங்கியுள்ளார். அதில் ஒன்றை அவர் குடித்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
உடனே அருகில் இருந்த அவரின் நண்பர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவணையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சணமுகத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சண்முகம் அருந்திய பீர் பாட்டிலை பார்த்தபோது அதில் புழு உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.