பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தனது தந்தைக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அத்வானி கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை நான் அவரிடம் கூறிய போது, தனது வாழ்நாள் முழுவதையும்நாட்டுக்காகவே செலவிட்டதாகக் கூறினார். தனக்கு இவ்வளவு பெரிய விருதை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அத்வானி கூறியதாக பிரதீபா அத்வானி தெரிவித்தார்.
ராமர் கோவில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையின் போது கூட அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இது அவரது வாழ்க்கையின் ஒரு கனவு, அதற்காக அவர் போராடினார். நீண்ட காலமாக உழைத்தார்.அவரை யாராவது புகழ்ந்தால், அவரது கண்களில் கண்ணீர் வரும், தற்போதும் கண்ணீர் வருகிறது என்று அவர் கூறினார்.
நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். எனது தந்தைக்கு இந்த விருதை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பொது வாழ்வில் எனது தந்தையின் பங்களிப்பு மகத்தானது என அத்வானியின் மகன் ஜெயந்த் அத்வானி தெரிவித்தார்.