கராச்சியில் உள்ள பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் வரும் 8-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், கராச்சியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பையில் இருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அங்கிருந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டும் என்றும், இதில், 400 கிராம் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கடிகாரம் மற்றும் 12 வோல்ட் பேட்டரி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரு அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. இருப்பினும் பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிடப்பட்ட தேதியில் (பிப்ரவரி 8 ஆம் தேதி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.