இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 381 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 3 பேர் உயிரிழந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 1 ஆயிரத்து 381 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 141 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 90 ஆயிரத்து 960 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் கேரளாவில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக கர்நாடகாவில் 59 பேருக்கும், மகாராஷ்டிராவில் 36 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 86 ஆயிரத்து 446 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.