நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
துப்பாக்கி தயாரிப்பது எப்படி என்பது பற்றி யூடியூபில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த 2 பேர் காணொளி வெளியிட்டனர். அது தொடர்பாக, நா.த.கயைச் சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டைத் துரைமுருகன், இளையான்குடி விஷ்ணு, ராஜபாளையம் இசை மதிவாணன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்துச் செய்யக் கோரி நா.த.க. இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராகச் சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம் என்றும் கைது நடவடிக்கை இருக்காது என்றும் என்.ஐ.ஏ தெரிவித்தது.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனை குறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நாட்டுக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, நாட்டுக்கு எதிரான பல்வேறு செயல்களில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழக போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால்தான் அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்தனர். தவறு செய்தவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்டால், “அய்யோ என்னை மிரட்டுறாங்க, அய்யோ என்னைக் காப்பாத்துங்க” என்று அலறும் சத்தமே வருகிறது. அதைத்தான் இப்போதும் தவறு செய்தவர்கள் செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மத்திய அரசு ஏஜென்ஸிகள் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விளக்கத்தை பாஜக மத்திய இணை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.