ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முழு ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடிக்கடி தேர்தல் நடத்துவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்றும், பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு பெரும் தொகை செலவிடப்படுவதாக கூறிய அவர், 2019 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு 10,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கூறினார்.
தேர்தல் நடத்த மக்களின் பணம் அரசின் கஜானா மூலம் செலவிடப்படுகிறது. ஆசிரியர்கள், அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறது. அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தினால் இதுபோன்ற அதிக செலவுகளைத் தவிர்க்கலாம். மக்கள் பயனடைவார்கள். எனவே இதனை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது, தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்குமான தேர்தல் செலவை குறைக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள மிக முக்கிய சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.