குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு பேசவுள்ளார். எனவே, இரு அவைகளிலும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்.
உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பிரிவினருக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரக் கொள்கைகளை மையமாக வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட அவை நடவடிக்கைகளின்படி, எம்.பி.க்கள் பி.பி.சௌத்ரி மற்றும் என்.கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் வெளிவிவகாரக் குழுவின் (பதினேழாவது மக்களவை) ‘பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்தல்’ என்ற தலைப்பில் 28ஆவது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திற்குச் சொந்தமான ‘பயிற்சி இயக்குநரகத்தின் செயல்பாடு’ குறித்த தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு நிலைக்குழுவின் 49ஆவது அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் நிலை குறித்த அறிக்கையை எம்பி ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்யவுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 ஆம் ஆண்டிற்கான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மதிப்பிடப்பட்ட ரசீதுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை (இந்தி மற்றும் ஆங்கில பதிப்புகள்) சமர்பிக்கவுள்ளார்.